மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்: மதுரை கலெக்டர் அரசுக்கு அறிக்கை

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று மதுரை கலெக்டர் வீர ராகவராவ் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்: மதுரை கலெக்டர் அரசுக்கு அறிக்கை
Published on

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின.

கலைநயம் மிக்க ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள வீரவசந்தராயர் மண்டபம் தீப்பிடித்ததில் இடிந்து விழுந்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை கலெக்டர் வீர ராகவராவ் ஒரு இடைக்கால அறிக்கையை, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார்.

மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 140 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீ விபத்து உள்ளிட்ட அசாதாரண சூழல் ஏற்பட்டால் அதற்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வசதிகள் செய்யப்படவில்லை.

தீ தடுப்பு கருவிகள் எதுவும் இல்லை. மிக குறுகிய இடத்தில் கடைகள் அனைத்தும் பாதுகாப்பற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றை கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கோவில் இணை ஆணையர் இது தொடர்பாக எந்தவித கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளவில்லை. கடைகளுக்கு அனுமதி கொடுத்த இணை ஆணையர் பாதுகாப்பு தொடர்பான வி‌ஷயங்களை கவனிக்க தவறி விட்டார்.


குறுகிய இடத்தில் பல கடைகள் வைக்க அனுமதி கொடுத்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கவும் வாய்ப்புள்ளது. பல கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதையும் அவர் கண்காணிக்கவில்லை. பக்தர்களிடம் மட்டும் கெடுபிடி காட்டிய கோவில் நிர்வாகம் பாதுகாப்பு வி‌ஷயத்தில் அலட்சியமாக இருந்துள்ளது.

இது தான் இந்த தீ விபத்திற்கு முக்கிய காரணமாக முதல்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு கோவில் நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு தான் காரணம் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பக்தர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மாவட்ட கலெக்டரின் அறிக்கையிலும் நிர்வாகத்தின் அலட்சிய போக்கை சுட்டிக்காட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com