கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை

கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை இன்று மாலை மும்பையில் நடைபெறுகிறது. இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் வாபஸ் ஆக வாய்ப்புள்ளது.
கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை
Published on

நாமக்கல்:

மண்டல அளவில் நடைபெறும் வாடகை டெண்டர் முறை மாற்றப்பட்டு இனி வரும் நாட்களில் மாநில அளவில் நடைபெறும் என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 12-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 4500 கியாஸ் டேங்கர் லாரிகள் 3-வது நாளாக இன்றும் இயங்கவில்லை.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த கிழக்கு மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த போராட்டத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

மேலும் கியாஸ் டேங்கர் லாரிகளில் வேலை செய்யும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் வேலை இழந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இந்த போராட்டத்தால் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 கோடி முதல் இது வரை 6 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சு வார்த்தைக்கு வரும் படி லாரி உரிமையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அழைப்பு விடுத்தது. பேச்சு வார்த்தையில் பங்கேற்க லாரி உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை மும்பையில் நடைபெறுகிறது. இதில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் வாபஸ் ஆக வாய்ப்புள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com