திண்டுக்கல் மாவட்டத்தில் யூனியன் தலைவர்களாக 7 பெண்கள் தேர்வாக வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் திமுக சார்பில் 4, அதிமுக சார்பில் 3 பெண் யூனியன் தலைவர்களாக பதவி ஏற்க உள்ளனர்.
அதிமுக-திமுக
அதிமுக-திமுக
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. 50 சதவீத இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் 7 ஒன்றியங்களுக்கு பெண்களும், 7 ஒன்றியங்களுக்கு பொது ஒன்றியத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 7 ஒன்றியங்களில் உள் ஒதுக்கீடாக எஸ்.சி. (பெண்) பிரிவினருக்கு ஒட்டன்சத்திரம் ஒன்றியம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, வேடசந்தூர், வடமதுரை, கொடைக்கானல் ஆகிய ஒன்றிய தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஒன்றிய தலைவர் பதவியில் உள் ஒதுக்கீடாக சாணார்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய ஒன்றியங்கள் எஸ்.சி. (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், நத்தம், பழனி, குஜியலியம்பாறை ஆகிய ஒன்றியங்கள் பொதுப்பிரிவு என்பதால் ஆண் அல்லது பெண் ஒன்றிய தலைவராக வாய்ப்புள்ளது.

மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் தி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் கைப்பற்றும் நிலை உள்ளது. இதன்படி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வத்தலக்குண்டு, கொடைக்கானல் ஆகிய ஒன்றியங்களில் தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், பழனி, சாணார்பட்டி, தொப்பம்பட்டி ஒன்றியங்கள் பொதுப்பிரிவு என்பதால் ஆண் கவுன்சிலர்கள் ஒன்றிய தலைவராகும் வாய்ப்பு உள்ளது.

நத்தம், குஜிலியம்பாறை ஒன்றியங்களில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவு அடிப்படையில் ஆண்கள் ஒன்றிய தலைவராக பதவி ஏற்க உள்ளனர். வடமதுரை, வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய 3 ஒன்றியங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இங்கு பெண்கள் ஒன்றிய தலைவராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது. ஆகமொத்தம் 14 ஒன்றியங்களில் தி.மு.க.வை சேர்ந்த 4 பெண்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பெண்களும் ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com