

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் குரங்கணி தீவிபத்து தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்கள்.
அதற்கு விளக்கம் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
10.3.2018 அன்று ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதியினை சார்ந்த 12 நபர்கள் கொண்ட குழு ஒன்று, குரங்கணிக்கு வந்துள்ளது. அன்றைக்கே குரங்கணியிலிருந்து உச்சி நிலையம் செல்வதற்கு சூழலியல் மேம்பாட்டு குழுவிலிருந்து 12 நுழைவுச் சீட்டுகள் பெற்று சென்றுள்ளனர்.
ஆனால், இக்குழு மேற்காணும் பகுதிக்கு செல்வதற்கு பதிலாக, மலையேற்றத்திற்கு அங்கீகரிக்கப்படாத குரங்கணியிலிருந்து கொட்டக்குடி காப்புக்காடு வழியாக, 7.1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.
கொழுக்குமலையில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கும் மட்டுமே இப்பாதையில் செல்ல அனுமதி உள்ளது. இந்தக் குழுவினர் 10.3.2018 அன்று இரவு கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத்தில் தங்கியுள்ளனர். இவர்கள் பெற்ற நுழைவுச்சீட்டு 10.3.2018 அன்று மட்டுமே செல்லத்தக்கதாகும். அன்று இரவே அந்த நுழைவுச்சீட்டு காலாவதி ஆகிவிட்டது.
மேலும், இது போன்ற குழுக்கள் இப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. இக்குழுவினர், 11.3.2018 அன்று முன் அனுமதி ஏதுமின்றி, மலையேற்றத்திற்கு அங்கீகரிக்கப்படாத பாதையின் வழியாக கொழுக்குமலையில் தனியார் தேயிலை தோட்டத்திலிருந்து, கொட்டக்குடி காப்புகாடு வழியாக குரங்கணிக்கு சென்று கொண்டு இருந்தனர்.
இதே போன்று, சென்னையிலிருந்து 27 நபர்கள் கொண்ட மற்றொரு குழு, சென்னை மலையேற்ற சங்கம் மூலமாக குரங்கணிக்கு 10.3.2018 அன்று வந்தடைந்தனர். அங்கிருந்து வனத்துறையினரிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல், கொட்டக்குடி காப்புக்காடு வழியாக மலை ஏற்றத்திற்கு அங்கீகரிக்கப்படாத பாதையில் கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத்திற்கு சென்று, அன்றிரவு அங்கு தங்கியுள்ளனர்.
இந்த தனியார் தேயிலைத் தோட்டம் ஓய்வு இல்லமாக செயல்படுவதற்கு அனுமதி ஏதும் பெறப்படவில்லை என்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இக்குழுவிலுள்ள 27 நபர்களில், மூன்று நபர்கள் கேரளாவிற்கு சென்று விட்டனர். மற்ற 24 நபர்கள், மலை ஏற்றத்திற்கு அங்கீகரிக்கப்படாத வழிப்பாதை மூலம் கொட்டக்குடி காப்புக்காடு வழியாக 11.3.2018 அன்று மலை ஏற்றத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த இரண்டு குழுவினரும் 11.3.2018 அன்று கொழுக்குமலையிலிருந்து குரங்கணிக்கு செல்வதற்கு எந்தவிதமான அனுமதியும் பெறவில்லை. இவ்வாறு வரும்பொழுது, எதிர்பாராத விதமாக அன்றைய தேதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர்.
வனத்துறை களப்பணியாளர்கள் தீ நிகழ்வு ஏற்பட்டதை 11.3.2018 அன்று மதியம் 2.30 மணியளவில் கண்டறிந்தனர். முத்துப் பாண்டி, வனக் காவலர் மற்றும் மூன்று சூழலியல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் தீயினை அணைக்கும் பொருட்டு தீ நிகழ்வு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இவர்கள் இப்பகுதிக்கு மாலை சுமார் 5 மணி அளவில் சென்ற போதுதான், மலையேற்றக் குழுவினர் தீயில் சிக்கிக் கொண்டது தெரிய வந்தது.
மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து, தமிழ்நாடு அரசு ஹெலிகாப்டர்களைக் கோரியது. அரசு மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது.