சிறையில் உள்ள குல்புஷன் ஜாதவை அவரது மனைவி, தாய் டிச.25-ம் தேதி பார்க்கலாம்: பாக். அரசு

உளவு பார்த்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவை சந்திக்க, அவரது மனைவி மற்றும் தாயாருக்கு டிசம்பர் 25-ம் தேதி அன்று அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

இஸ்லாமாபாத்:

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பு‌ஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் ராணுவ கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது.

இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றத்தை குல்புஷன் ஒப்புக் கொண்டது போன்ற வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது. இந்த நிலையில், குல்புஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குல்புஷன் ஜாதவை பார்க்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என இந்தியா சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அவர்களுக்கு அங்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்நிலையில், வரும் 25-ம் தேதி ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்கலாம் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, அவர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா தர அனுமதித்துள்ளதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com