குல்பூஷன் ஜாதவ் வழக்கு- சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்குகிறது

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்குகிறது. #KulbhushanJadhav #ICJ
குல்பூஷன் ஜாதவ் வழக்கு- சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்குகிறது
Published on

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (வயது 48), இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், மோதல்கள் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது. ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டார் என்று இந்தியா தெரிவித்தது. அத்துடன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் செயல்பட்டு வருகிற சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது.

இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷனின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது. இரு தரப்பிலும் விரிவான மனுக்கள் மற்றும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து 2019 பிப்ரவரி 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை விசாரணை நடைபெறும் என சர்வதேச நீதிமன்றம் அறிவித்தது.

இந்தியா தரப்பில் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே இன்று தனது வாதத்தை முன்வைக்க உள்ளார். பாகிஸ்தான் தரப்பில் இங்கிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவார் குரேஷி வாதாடுகிறார். நாளை நடைபெறும் விசாரணையின்போது அவர் தனது வாதத்தை முன்வைக்க உள்ளார். நாளை மறுநாள் இந்தியா தரப்பில் பதில் அளிக்கப்படும். 21-ம் தேதி பாகிஸ்தான் தரப்பில் இறுதிக்கட்ட வாதம் முன்வைக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com