

சென்னை:
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள், காமராஜர் நினைவுநாள், லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
இதையொட்டி, தலைவர்களின் படங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, சத்தியமூர்த்தி பவனில் நடந்த புகைப்பட கண்காட்சியையும் அவர் திறந்து வைத்தார். இதில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களின் 100 அரிய புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன. இதையொட்டி ஏ.கே.செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது.
முன்னதாக சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலை, கிண்டியில் உள்ள காந்தி, காமராஜர் நினைவிடங்களிலும் கே.எஸ்.அழகிரி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, கோபண்ணா, முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, விஷ்ணு பிரசாத் எம்.பி., செல்வ பெருந்தகை, சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோகர், மாநில துணை தலைவர் தாமோதரன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், யுவராஜ சேகர், வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. உ.பலராமன், டாக்டர் கலீல் ரகுமான், தணிகாசலம், பி.வி.தமிழ்செல்வன், வேளச்சேரி செல்வம், ரஞ்சன் குமார், தணிகைவேல், ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
தேசப்பிதா மகாத்மா காந்தியின் தியாகம் மறக்க முடியாதது. அவரது நினைவை போற்றும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காந்தியின் புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது.
அகிம்சை தேசமான இந்தியாவில் இன்று பாசிச ஆட்சி நடைபெறுகிறது. வகுப்பு வாதமும், மதவாதமும் தலை தூக்கி இருக்கிறது. காந்திய வழியில் இதை எதிர்கொண்டு வெற்றி காண்போம்.
மகாபலிபுரத்துக்கு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் வர இருக்கிறார்கள். அவரை வரவேற்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. ஆனால் சமீபத்தில் உயிர்பலி ஏற்பட்டதால் கோர்ட்டில் தடை செய்யப்பட்ட பேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு அரசு வழிவகுக்கிறது.
மோடியை வரவேற்பதற்காக பேனர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோர்ட்டில் அனுமதி கேட்டுள்ளது. இது ஒரு தவறான முன் உதாரணம், சட்டத்தை வளைக்க அரசே முன் உதாரணமாக இருப்பது வேதனை அளிக்கிறது. வரவேற்பதற்கு பத்திரிகை, தொலைக்காட்சி, தனியார் சுவர்கள் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அதை பார்த்தே மோடியும், சீன அதிபரும் புரிந்து கொள்வார்கள். சீனாவில் போஸ்டர், பேனர் கலாசாரமே கிடையாது. அவர்களிடமும் புதிய கலாச்சாரத்தை புகுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.