23 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து திருநங்கைகளுக்கு கைகொடுக்கும் கொச்சி மெட்ரோ ரெயில்

நாட்டிலேயே முதன்முறையாக 23 பணியிடங்களை திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்து கொச்சி மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளது.
23 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து திருநங்கைகளுக்கு கைகொடுக்கும் கொச்சி மெட்ரோ ரெயில்
Published on

கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய நகரான கொச்சியில் மெட்ரோ ரெயில் திட்டம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், வெகுவிரைவில் ரெயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலைவாய்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இதில், 23 இடங்கள் திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ரெயில் நிலைய துப்புரவுப்பணி, பயணச்சீட்டு வழங்குதல் போன்ற பணிகள் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யபடுவர் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசு சார் நிறுவனம் ஒன்றானது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மொத்தமாக வேலைவாய்ப்பு வழங்குவது இதுவே முதன் முறையாகும். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் எலியாஸ் ஜார்ஜ் ,”இந்த அறிவிப்பு அவர்களுக்கு முக்கியமான ஒன்று. இந்த முதல் முயற்சி வெற்றிகரமாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். மற்ற நிறுவனங்களும் இதே போல மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கொச்சி மெட்ரோ நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டுமல்லாமல் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பு குறித்து அனைவரும் பாராட்டுகளை கூறி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சமூக, பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு கொள்கைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, திருநங்கைகளுக்கான தனி சட்ட வாரியம் அமைக்கப்பட்டது. மேலும், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிவறை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com