ஆசிரியைக்கு கத்திகுத்து - சீர்திருத்த பள்ளியில் மாணவர் அடைப்பு

திருவள்ளூர் அருகே டியூசன் ஆசிரியையை கத்தியால் குத்திய 9-ம் வகுப்பு மாணவன் சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டான்.
ஆசிரியைக்கு கத்திகுத்து - சீர்திருத்த பள்ளியில் மாணவர் அடைப்பு
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு கணேஷ் நகரை சேர்ந்தவர் ஆனந்த சர்மா. இவரது மனைவி அம்பிகாதேவி (வயது 59). இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு டியூசன் எடுத்தார். அவரிடம் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து டியூசன் படித்தனர். அவரிடம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனும் டியூசன் படித்தான்.

அவருக்கு உடல் நலமில்லாததால் கடந்த 1 வருடமாக டியூசன் எடுக்கவில்லை. இந்தநிலையில் தற்போது 9-ம் வகுப்பு படித்து வந்த வேப்பம்பட்டை சேர்ந்த மாணவன் அம்பிகா தேவியை அணுகி தனக்கு கணக்கு பாடம் சரியாக வரவில்லை என்றும் அதற்கு மட்டும் டியூசன் எடுக்கு மாறும் கூறினான்.

ஆனால் அம்பிகா தேவி தனக்கு உடல்நலம் சரியில்லை என்பதை காரணம் காட்டி டியூசன் எடுக்க மறுத்தார். தொடர்ந்து அந்த மாணவன் அம்பிகா தேவியை அணுகியும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நேற்று மாணவன் கணித பாட புத்தகத்தை எடுத்துக் கொண்டு அம்பிகா தேவியின் வீட்டுக்கு சென்றான். தனக்கு டியூசன் எடுக்குமாறு கூறினான். ஆரம்பத்தில் பிடிவாதமாக மறுத்த அவர் இன்று ஒருநாள் மட்டும் டியூசன் எடுக்கிறேன் என்றார். அதன்படி கணக்கு பாடத்தை மாணவருக்கு கற்றுக் கொடுத்தார்.

அப்போது மாணவன் தினமும் தனக்கு டியூசன் எடுக்குமாறு கூறினான். அதற்கு அம்பிகா தேவி மறுக்கவே அவரை மாணவன் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

நெற்றி, காது, தாடை ஆகிய இடங்களில் கத்திக் குத்துபட்ட அம்பிகா தேவி அலறித்துடித்தார். உடனடியாக உறவினர்கள் ஓடி வந்து அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மாணவனை கைது செய்தனர்.

இந்த நிலையில் கைதான மாணவனை திருவள்ளூர் சமூக நல ஆர்வலர் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவன் சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டான். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com