வாலிபரை கொன்று கோவிலில் புதைப்பு- அர்ச்சகர், கள்ளக்காதலி கைது

பண்ருட்டியில் வாலிபரை கொன்று கோவிலில் புதைத்த அர்ச்சகர் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.
கோபிநாத்- கண்ணதாசன்
கோபிநாத்- கண்ணதாசன்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் மஞ்சுளா(வயது 29). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளா தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மஞ்சுளாவுக்கும், பண்ருட்டியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்த பணிக்கன்குப்பத்தை சேர்ந்த கண்ணதாசன்(34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வி.ஆண்டிக்குப்பத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி கடைக்கு வேலைக்கு சென்ற கண்ணதாசன், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது கண்ணதாசன், மஞ்சுளா ஆகியோரின் செல்போன் எண்ணை பெற்று, அதில் யார்-யாரிடம் பேசியுள்ளார்கள் என்று ஆய்வு செய்தனர். அப்போது மஞ்சுளா பலரிடம் செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மஞ்சுளா, அதே ஊரில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் அர்ச்சகரும், பிரபல ஜோதிடருமான கோபிநாத்(52) என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்தார். மஞ்சுளா வேலை முடித்து வீட்டுக்கு வந்த பிறகும், கோபிநாத்துடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை கண்ணதாசன் கண்டித்துள்ளார். இதனால் கண்ணதாசனை தீர்த்துக்கட்ட மஞ்சுளாவும், கோபிநாத்தும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 12-ந்தேதி கண்ணதாசனை சமாதானப்படுத்துவதற்காக கோபிநாத் அவரை வேணுகோபாலசாமி கோவிலுக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கிருந்த மஞ்சுளா மற்றும் சிலர் சேர்ந்து இரும்பு கம்பியால் கண்ணதாசனை சரமாரியாக அடித்து கொலை செய்தது தெரியவந்தது.. பின்னர் கோவிலில் பூஜை பொருட்கள் வைக்கப்படும் அறையில் பள்ளம் தோண்டி கண்ணதாசனின் உடலை புதைத்தனர். தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக மஞ்சுளா போலீசில் புகார் செய்து நாடகமாடியுள்ளார். இதுதொடர்பாக கோபிநாத், மஞ்சுளாவை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com