ஆசிரியையை கடத்த முயற்சி: அ.தி.மு.க. பிரமுகர் கைது

கொடுமுடி அருகே ஆசிரியையை கடத்த முயன்ற அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்து ஈரோடு ஜெயிலில் அடைத்தனர்.
ஆசிரியையை கடத்த முயற்சி:  அ.தி.மு.க. பிரமுகர் கைது
Published on

கொடுமுடி:

கொடுமுடி அருகே உள்ள தட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 41). இவர் அ.தி.மு.க. வில் கொடுமுடி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவரது மனைவியின் தங்கை சிவகிரி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவர் தனது அக்காள் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார். அவரை திருமணம் செய்து கொள்ள கவுரிசங்கர் நினைத்தார்.

இது தொடர்பாக துன்புறுத்தல் அதிரித்ததால் கவுரிசங்கரின் மனைவி, தங்கையை அழைத்துக் கொண்டு கொடுமுடி அருகே தேவம் பாளையத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு சென்றும் கவுரிசங்கர் தொல்லை கொடுத்தாராம். எனவே ஆசிரியையை குள்ளக்கவுண்டன்புதூரில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு அவரது தந்தை அனுப்பி வைத்தார். ஆசிரியைக்கு திருமணம் நடத்த ஏற்பாட்டையும் செய்தார். ஒரு மணமகனை பார்த்து திருமண நிச்சயதார்த்த தேதியை முடிவு செய்தார். வருகிற 22-ந் தேதி நிச்சயதார்த்த நிகழ்வு நடப்பதாக இருந்தது.

இந்த நிலையில் அக்கா வீட்டில் தங்கி இருந்த ஆசிரியை கொளாநல்லியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு கவுரி சங்கர் காரில் வந்து ஆசிரியையின் கையை பிடித்து இழுத்து அங்கிருந்து காரில் கடத்தி செல்ல முயன்றார். பொதுமக்களும், பக்தர்களும் திரண்டதால் காரில் தப்பினார். அவரை துரத்தி சென்றனர். அப்போது கவுரிசங்கர் சென்ற கார் கரூர்-ஈரோடு ரோட்டில் சத்திரப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது நிலை தடுமாறி ஓடி கவிழ்ந்தது.

பின் தொடர்ந்து வந்தவர்கள் கவுரி சங்கரையும், காரை ஓட்டி வந்த கணபதி பாளையம் நால்ரோடு, ஆயிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சதீசையும் சுற்றி வளைத்து பிடித்து மலையம்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து ஆசிரியையின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கவுரிசங்கர், சதீஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட் டம், கொலை முயற்சி விடுத்தல், தடுத்து நிறுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2 பேரும் கொடுமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com