மலேசியாவில் தற்கொலை செய்தது ஓமனா அல்ல: போலீஸ் விசாரணையில் தகவல்

மலேசியாவில் தற்கொலை செய்தது ஊட்டியில் கள்ளக்காதலன் கொலையில் தலைமறைவான டாக்டர் ஓமனா இல்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மெரிலின் ரூபி.
தற்கொலை செய்து கொண்ட மெரிலின் ரூபி.
Published on

கொழிஞ்சாம்பாறை:

மலேசியாவில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 3-வது மாடியில் இருந்து குதித்து ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடல் அருகே ஒரு சூட்கேஸ் கிடந்தது.

அதை கைப்பற்றி போலீசார் சோதனை செய்து பார்த்தபோது ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை செய்த பெண் யார்? சூட்கேசில் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டவர் யார்? என்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் முகதோற்றத்தை வைத்து அவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள மலையாள மக்கள் சங்கம் மற்றும் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மலையாள மக்கள் சங்கத்தினர் தற்கொலை செய்தது கேரளாவை சேர்ந்த பெண் தான் என்று உறுதிப்படுத்தினர். இதையடுத்து நடந்த விசாரணையில் அந்த பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள செரியவல்லராடாவை சேர்ந்த மெரிலின் ரூபி(வயது 37) என்பது தெரியவந்தது.

கடந்த 2012-ம் ஆண்டு வேலை தேடி மலேசியா சென்ற அவர் அங்குள்ள ஒரு எலக்ட்ரானிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் தான் அவர் தங்கியிருந்த வீட்டின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மலேசியா போலீசார் மெரிலின் ரூபி உடலை கடந்த 18-ந்தேதி கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் அடக்கம் செய்தனர்.

தொடர்ந்து மெரிலின் ரூபியின் இறந்த சடலத்தை பத்திரிக்கையில் வெளியிட்டு அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

பத்திரிகைகளில் வெளியான அறிவிப்பை பார்த்த தலைப்பரம்பு போலீசார் விளம்பரம் செய்யப்பட்ட உடல் ஊட்டியில் கள்ளக்காதலனை வி‌ஷ ஊசி போட்டு கொன்று துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீச சென்ற போது சிக்கிய டாக்டர் ஓமனாவின் உடல் என்று கூறினர். மேலும் கடந்த 2001-ம் ஆண்டு ஜாமீனில் சென்ற ஓமனா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இன்டர்போல் போலீஸ் மூலம் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் மலேசியாவில் தற்கொலை செய்து கொண்டது மெரிலின் ரூபி அல்ல, டாக்டர் ஓமனா தான் என்று தலைபரப்பு போலீசார் தெரிவித்தனர். இதனால் கேரள போலீஸ் வட்டாரத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து உயர் மட்ட போலீசார் அடங்கிய குழுவினர் கூறும்போது,

இறந்த உடலை விளம்பரப்படுத்தியதால் டாக்டர் ஓமனா போல் தோற்றம் உள்ளது. உயிருடன் இருந்த போட்டோவை வெளியிட்டிருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது. எனவே தற்கொலை செய்த பெண் மெரிலின் ரூபி தான் என்பதை உறுதி செய்தனர். இதனால் தலைபரப்பு போலீசாருக்கு ஏற்பட்ட குழப்பம் தீர்ந்தது.

மேலும் இது குறித்து கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து மெரிலின் ரூபி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? சூட்கேசில் கிடந்த வாலிபர் உடல் யாருடையது? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com