கேரளாவில் சாலையோரம் 7 மணிநேரம் வெயிலில் கிடந்த மளிகை கடை ஊழியர் மரணம்

கேரளாவில் சாலையோரம் 7 மணிநேரம் வெயிலில் மயங்கி கிடந்த மளிகை கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பலியான செல்லப்பன்.
பலியான செல்லப்பன்.
Published on

கோவை:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குட்டிப்புரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்தவர் செல்லப்பன் (வயது 65). இவர் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி குலசேகரபுரத்தை சேர்ந்தவர்.

நேற்று செல்லப்பன் மளிகை கடையில் இருந்து சாப்பிட அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டு விட்டு 10 மணிக்கு மீண்டும் கடைக்கு புறப்பட்டார். திருக்கனாபுரம் வழியே வந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு சாலையோரம் விழுந்தார்.

அப்போது அந்த வழியே வந்தவர்கள் போதையில் மயங்கி கிடப்பதாக நினைத்து கடந்து சென்றனர். கார், மோட்டார் சைக்கிள், போலீஸ் வாகனங்கள் அந்த வழியே சென்றபோதும் முதியவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.

கடும் வெயிலில் கிடந்த அவரை காலையில் பார்த்த முதல் நபர் மாலை 5 மணிக்கு மீண்டும் பார்த்தார். போதையில் படுத்திருந்தால் இவ்வளவு நேரம் இருக்க முடியாது என்று சந்தேகம் அடைந்த அவர் அருகில் சென்று பார்த்தார். அப்போது அவர் குடிபோதையில் கிடக்கவில்லை என்பதை அறிந்தார்.

பின்னர் இது குறித்து குட்டிப்புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரை மீட்டு குட்டிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் முதியவர் வெயில் கொடுமையால் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.

இது குறித்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து முதியவர் செல்லப்பனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கூறும்போது, மயங்கி கிடந்த முதியவரை போதையில் கிடந்ததாக நினைத்து பொதுமக்கள், போலீசார் கடந்து சென்றது மனிதாபிமானமற்ற செயல்.

7 மணி நேரத்துக்கு மேல் வெயிலில் கிடந்ததால் செல்லப்பன் பரிதாபமாக இறந்தார். வெயில் காலம் என்பதால் போதையிலேயோ, மயங்கியோ யார் சாலையில் கிடந்தாலும் பொதுமக்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கலாம். அல்லது போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். உரிய நேரத்தில் தகவல் கிடைத்தால் விலைமதிப்பற்ற உயிர் காப்பாற்றப்படும் என்றார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com