கரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி

கரூரில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி
Published on

கரூர்:

கரூர் வாங்கல் அம்மன் நகரை சேர்ந்தவர் திருப்பதி, முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கிரிஜா (வயது 40). இவர்களுக்கு சுரேஷ் (22) என்ற மகனும், ரம்யா (19) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் திருப்பதிக்கும், கிரிஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, கிரிஜா, மகன், மகளுடன் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்தது. அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு 3 பேரும் மயங்கிய நிலையில் வீட்டிற்குள் கிடந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் 3 பேரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்றது தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் எதற்காக அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டனர் என்பது தெரியவில்லை. திருப்பதிக்கு மது பழக்கம் இருந்துள்ளது. மதுபழக்கத்தை கைவிட வலியுறுத்தியும் அவர் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் அடிக்கடி கிரிஜாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக மகன், மகளுடன் தனியாக வாழ்ந்து வந்த கிரிஜா மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். மேலும் வருமானத்துக்காக 100 நாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். ஆனால் அந்த வருமானம் குடும்பத்தை நடத்த காணவில்லை என்பதால் வறுமை காரணமாக மகன், மகளுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்ததோடு, அவரும் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

ஆனால் 3 பேரும் மயக்க நிலையில் இருப்பதால் அவர்களிடம் போலீசாரால் விசாரணை நடத்த முடியவில்லை. மயக்க தெளிந்த பிறகு நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் 3 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணங்கள் தெரியவரும்.

ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கரூர் பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com