

தி.மு.க. தலைவர் கருணா நிதியின் 94-வது பிறந்தநாள் விழா வருகிற ஜூன் 3-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
வழக்கமாக ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் கருணாநிதி தொண்டர்களை சந்திப்பார். அப்போது அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிவார்கள்.
அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கருணாநிதிக்கு புத்தகங்கள், சால்வைகள், பூங்கொத்துகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கி வாழ்த்து சொல்வார்கள். பிற்பகல் வரை அமர்ந்து இருந்து அனைத்து தொண்டர்களின் வாழ்த்துக்களையும் அவர் ஏற்றுக் கொள்வார்.
பிறந்த நாளில் கட்சி தலைவரை சந்தித்து தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள்.
தற்போது வயது முதிர்வு காரணமாக உடல்நலமில்லாமல் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கடந்த சில மாதங்களாக ஓய்வு எடுத்து வருகிறார். எனவே இந்த ஆண்டு பிறந்தநாளில் தொண்டர்களை சந்திப்பாரா? என்ற எதிர் பார்ப்பு எழுந்தது.
டாக்டர்கள் அனுமதித்தால் நிச்சயம் தொண்டர்களை சந்திப்பார் என்று சமீபத்தில் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.
இந்த நிலையில் கருணாநிதி தனது பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி தொண்டர்களை சந்திக்கிறார். இதற்கான விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என்று தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
கருணாநிதி எம்.எல்.ஏ. வாகி 60 ஆண்டுகள் சட்டசபையில் பணியாற்றி இருக்கிறார். எனவே அவரது பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற பணி வைரவிழா ஆகிய இருபெரும் விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்திய அரசியல்வாதிகளில் முதுபெரும் அரசியல் தலைவராக திகழும் கருணாநிதியின் இந்த பிறந்தநாள் வைர விழாவாகவும், அமைவதால் பல்வேறு அரசியல் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளார்கள்.
கனிமொழி எம்.பி. நேரில் சென்று தலைவர்களை சந்தித்து அழைப்பு கொடுத்து வருகிறார். பீகார் முதல்-மந்திரி நிதீஷ்குமார், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் விழாவுக்கு வர ஒத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.