திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் கோவிலில் முருகன்-தெய்வானைக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
திருப்பரங்குன்றம் கோவிலில் முருகன்-தெய்வானைக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
Published on: 

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கந்த சஷ்டி விழாவாகும். இந்த விழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

முன்னதாக கோவிலில் சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவையொட்டி சண்முகருக்கு காலையிலும் மாலையிலும் சண்முக அர்ச்சனை நடைபெறும். இரவு 7 மணி அளவில் தந்தத்தொட்டி சப்பரத்தில் எழுந்தருளி முருகன் தெய்வானையுடன் ஆஸ்தான மண்டபத்தை மூன்று முறை வலம் வருவார்.

விழாவை முன்னிட்டு சுவாமி-அம்பாள் தினமும் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். முக்கிய நிகழ்ச்சியாக நவம்பர் 1-ந்தேதி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் அம்மனிடம் இருந்து முருகன் சக்தி வேல் வாங்கும் வைபவம் நடைபெறும்.

சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறும். இதையொட்டி சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு சுப்பிரமணிய சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி சக்திவேல் கொண்டு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பார்கள்.

விழாவையொட்டி மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி விரதத்தை தொடங்கினர். அவர்களுக்கு கோவில் சார்பில் காலை-மாலையில் எலுமிச்சம்பழம் சாறு வழங்கப்படுகிறது.

விழாவின் நிறைவு நாளான 3-ந்தேதி முருகப் பெருமானுக்கு பாவாடை தரிசனம் நடைபெற்று தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

X