ஓட்டப்பிடாரம் தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் காந்தியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று பிரசாரம் செய்கிறார். #KamalHaasan #OttapidaramConstituency
ஓட்டப்பிடாரம் தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான மனுத்தாக்கல் கடந்த மாதம் (ஏப்ரல் 22)-ந் தேதி தொடங்கியது. நேற்று மனுக்கள் வாபஸ் பெறுவது முடிவடைந்ததையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன், தி.மு.க. வேட்பாளர் சண்முகையா, அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யா, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் காந்தி உள்பட 15 பேர் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் சார்ந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் செய்தார். கனிமொழி எம்.பி. தொகுதியில் தொடர்ந்து முகாமிட்டு ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மக்கள் நீதிமய்யத்தின் வேட்பாளர் காந்தியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று (3-ந் தேதி) தனது பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வருகிறார்.

பின்னர் நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.30 மணியளவில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட குமரெட்டியாபுரம் பகுதியில் தனது பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார். அதனை தொடர்ந்து அய்யப்பன்நகர், கே.டி.சி.நகர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்து விட்டு இரவு 7 மணியளவில் தாளமுத்துநகர் சிலுவைப்பட்டியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பின்னர் நெல்லைக்கு வந்து ஓய்வெடுக்கிறார். கமல்ஹாசன் நாளை 2-ம் நாளாக ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரசாரம் செய்கிறார். இறுதிகட்டமாக வருகிற 14-ந் தேதியும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். #KamalHaasan #OttapidaramConstituency

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com