ஆட்சி தலைமையில் மாற்றம் வரும்- கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பேட்டி
மதுரை மேலூரில் டி.டி.வி.தினகரன் புதிய அமைப்பு தொடங்கிய நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க.எம்.எல்.ஏ. பிரபு கலந்து கொண்டார்.
இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
அண்ணன் டி.டி.வி.தினகரன் புதிய அமைப்பை மதுரை மேலூரில் தொடங்கினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அங்கு நான் சென்றேன். திங்கள்கிழமை சட்டசபைக்கு செல்வேன். மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக டி.டி.வி. தினகரன் திகழ்கிறார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் அவரை மக்கள் வெற்றி பெற வைத்தார்கள்.
அம்மாவின் மறைவிற்கு பிறகு தமிழகத்தை வழிநடத்த நல்ல தலைவராக டி.டி.வி.தினகரன் செயல்பட்டு வருகிறார். அனைத்து தரப்பு மக்களும் அவரை விரும்புகிறார்கள். தமிழக மக்கள் முன்னேற்றத்துக்கு அம்மாவின் வழியில் சிறந்த ஆட்சி நடத்திட அவரால் முடியும் என்று நம்புகிறார்கள்.
மேலூரில் நடந்த அமைப்பு தொடக்க விழாவில் பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். 95 சதவீதம் கட்சி தொண்டர்கள் டி.டி.வி.தினகரன் அண்ணன் பக்கமே இருக்கிறார்கள்.
18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் வரும் அதன் பிறகு ஆட்சி தலைமையில் மாற்றம் ஏற்படும். டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆட்சி அமையும்.
மாநிலத்தில் சுய ஆட்சியை நிலைநாட்டுகிற வகையில் அந்த ஆட்சி இருக்கும். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும். மக்கள் நலனுக்காக பாடுபடுகிற வகையில் அந்த ஆட்சி செயல்படும்.

