

புதுடெல்லி:
தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் ஒன்று திரண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மனித சங்கிலியை போல் அமைத்துக் கொண்டு பல்கலைக் கழகம் முழுவதும் வலம் வந்தனர்.
பல்கலைக் கழக நிர்வாகத்தில் ஊழல் நடைபெறுவதாக கூறி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக் கழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்ஸி நிலவுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
போராட்டத்தின் போது பேசிய மாணவர் தலைவர் மோகித் குமார் பாண்டே, “பல்கலைக் கழக நிர்வாகம் மாணவர்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. மாணவர்களை அட்மின் பிளாக்கில் கூட போராட்டம் நடத்த அனுமதிக்காது. இது வேறு ஒன்றுமில்லை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி” என்றார்.
இந்த கூட்டத்தில் மாணவர்கள் சங்கம் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர் பிரபாத் பட்நாயக் எதிராக பல்கலைக் கழகம் எடுத்துள்ள நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், பல்கலை கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளையும் மாணவர்கள் வெளிப்படுத்தினர்.