கோர்ட் தீர்ப்பு நகல் கிடைத்ததும் 7 பேர் விடுதலை செய்ய கவர்னரிடம் பரிந்துரை செய்யப்படும்- ஜெயக்குமார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக, கோர்ட் தீர்ப்பின் நகல் கிடைத்ததும் கவர்னரிடம் பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #MinisterJayakumar
கோர்ட் தீர்ப்பு நகல் கிடைத்ததும் 7 பேர் விடுதலை செய்ய கவர்னரிடம் பரிந்துரை செய்யப்படும்- ஜெயக்குமார்
Published on

சென்னை:

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ள நிலையில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தெளிவான முடிவு எடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தார். இந்த 7 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாகும்.

ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்ததால் தீர்ப்புக்காக காத்திருந்தோம். இப்போது 7 பேரையும் விடுதலை செய்வது பற்றி தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்ற தீர்ப்பு மாநில அரசின் முடிவுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.

எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அதில் உள்ள உத்தரவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆராய்ந்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி தேவையான முடிவுகளை எடுப்பார்.

தேவைப்பட்டால் மீண்டும் அமைச்சரவை கூட்டி விவாதித்து கவர்னருக்கு பரிந்துரைக்கவும் வழிவகை இருப்பதாக தெரிகிறது.

எனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தமிழக அரசு உரிய முடிவை எடுக்கும்.

கோர்ட்டு தீர்ப்பின் நகல் வருவதற்கு குறைந்தது 2 நாள் ஆகும். அதன் பிறகு அதை முழுவதும் படித்து பார்க்க வேண்டும். சட்ட நிபுணர்களுடன் விவாதிக்க வேண்டும்.

இப்படி பல்வேறு நடைமுறைகள் இருப்பதால் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைந்து முடிவுகளை மேற்கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar

X

Maalai Malar
www.maalaimalar.com