

ஜெருசலேம்:
ஈரான் நாட்டை சேர்ந்தவர் நேடா அமின்(32). ஈரான் நாட்டு அரசியல் நிலவரங்கள் மற்றும் அங்கு பெண்களுக்கு எதிராக திணிக்கப்படும் அடக்குமுறைகள் தொடர்பான தனது கருத்துகளை இணய வலைத்தளத்தில் (பிளாக்) இவர் தைரியமாக பதிவிட்டு வந்தார். இதற்காக அந்நாட்டு அரசின் உத்தரவுப்படி பலமுறை கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்குள்ளான நேடா அமின் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகத்துக்கு அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஈரானை விட்டு வெளியேறிய இவர் துருக்கி நாட்டில் அகதியாக தன்னை பதிவு செய்து கொண்டார். அங்கிருந்தவாறு ‘தி இஸ்ரேல் டைம்ஸ்’ பத்திரிகையின் பாரசீக மொழி செய்தியாளராக பணியாற்றினார். மேலும், தொடரந்து தனது வலைத்தளத்தில் ஈரான் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக செய்தி கட்டுரைகளை எழுதி வந்தார்.
இதனால், ஈரான் அரசின் தூண்டுதலின்படி துருக்கி நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் இவரை தங்களது நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இந்த அதிரடி உத்தரவால் அதிர்ச்சி அடைந்த நேடா அமின், துருக்கியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்தின் உதவியை நாடினார்.
தன்னை ஈரானுக்கு திருப்பி அனுப்பினால் உயிருக்கு பாதுகாப்பு இருக்காது என அச்சம் தெரிவித்திருந்த இவர், வேறு ஏதாவது வெளிநாடுகளில் அடைக்கலம் பெற்றுத்தர உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதே கோரிக்கையை சர்வதேச மனித உரிமை அமைப்பிடமும் முன்வைத்திருந்தார்.
ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் இன்னும் 30 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் துருக்கி நாட்டு குடியுரிமைத்துறை அலுவலகம் கடந்த 5-7-2017 அன்று கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், உயிர் பயத்தில் தவிக்கும் நேடா அமினுக்கு அடைக்கலம் அளிக்க இஸ்ரேல் அரசு முன்வர வேண்டும் என இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த வேண்டுகோளை ஏற்று அவருக்கு சிறப்பு விசா வழங்கப்படும் என இஸ்ரேல் நாட்டின் உள்துறை மந்திரி அர்யே டேரி தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக பகைநாடான ஈரானை சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் அளிக்க இஸ்ரேல் அத்தனை எளிதாக சம்மதிப்பதில்லை. இருப்பினும், ‘ஒரு பத்திரிகையாளரின் உயிர் ஆபத்தில் இருப்பதால் மனிதநேய அடிப்படையில் நேடா அமினுக்கு உடனடியாக விசா அளிக்கப்பட்டது’ என இஸ்ரேல் உள்துறை மந்திரி அர்யே டேரி குறிப்பிட்டுள்ளார்.