லாஸ் வேகாஸ் நகர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை

அமெரிக்காவின் கேளிக்கை நகரமான லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் இதில் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
லாஸ் வேகாஸ் நகர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை
Published on

அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் சூதாட்டம், விபசாரம், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு பேர்போன லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கிராமிய திருவிழா மற்றும் சுற்றுலா திடலில் மூன்றுநாள் கிராமிய இசைவிழா நடைபெற்று வந்தது.

எம்.ஜி.எம். நிறுவனத்துக்கு சொந்தமான இந்த திடல் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் இங்கு 40 ஆயிரம் பேர் வரை கூடலாம். இசை விழாவின் மூன்றாவது கடைசிநாளான நேற்றிரவு இசை நிகழ்ச்சியை காண 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது, அருகாமையில் உள்ள மண்டலே பே என்ற சொகுசு ஓட்டலின் 32-வது மாடியில் நின்றவாறு இசை நிகழ்ச்சி நடைபெற்ற திடலை நோக்கி ஒரு மர்மநபர் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டான்.

சுமார் பத்து துப்பாக்கிகளை பயன்படுத்தி மாறிமாறி அவன் நடத்திய தாக்குதலில் இசை நிகழ்ச்சியை ஆர்வத்துடன் ரசித்து கொண்டிருந்தவர்களின் உடல்களில் தோட்டாக்கள் துளைத்தன. ரத்தம் வழிந்தவாறு கூச்சலிட்டபடி அவர்கள் மூலைக்கு ஒருவராக ஓடினர்.

சுமார் பதினைந்து நிமிடம் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் எதிரி எங்கிருந்து சுடுகிறான்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய போலீசார், இறுதியாக மண்டலே பே ஓட்டலை அடையாளம் கண்டு அங்கு விரைந்து சென்றனர். 32-வது மாடிக்கு அவர்கள் சென்றடைவதற்கு முன்னர் இந்த தாக்குதலை நடத்தியவன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்தான்.

இந்த கொடூர தாக்குதலில் இருவர் பலியானதாகவும், காயமடைந்த சுமார் 400 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இன்று காலை செய்திகள் வெளியாகின. பிற்பகல் நிலவரப்படி 20 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை இன்று மாலை 50-ஐ கடந்துள்ளது.

இந்த தாக்குதலை தனி ஒருவனாக நடத்தி பலியானவனின் பெயர் ஸ்டீபன் பாடாக் என்பதும், சுமார் 64 வயதுடையை இவன் ஒரு பெண்ணுடன் அந்த ஓட்டலில் தங்கி இருந்ததும் தெரியவந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தற்போது பொறுப்பேற்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் இஸ்லாம் மதத்தை தழுவிய எங்களது மாவீரன் லாஸ் வேகாஸ் தாக்குதலை நடத்தியுள்ளான் என ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான அமாக் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com