

லக்னோ:
உத்திர பிரதேச மாநிலத்தில் சிறப்பு அதிரடி படையினர் நடத்திய சோதனையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து துப்பு கிடைத்ததை தொடர்ந்து சிறப்பு அதிரடி படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கான்பூர் பகுதியின் மூன்று இடங்களில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் ரொக்கம், லேப்டாப், மற்றும் பல்வேறு மொபைல் போன்கள், விலை பட்டியல் எழுதப்பட்டிருந்த புத்தகம் மற்றும் நாட்குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. இணையத்தளங்களில் இருந்து விலையை தெரிந்து கொண்டு ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த கும்பல் நாள் ஒன்றிற்கு 30 முதல் 35 லட்சம் வரை சம்பாதித்து வந்துள்ளனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டிகளின் பத்தாவது ஆண்டு போட்டிகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது.