2017 ஐபோன் மாடல்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் பெற கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X சாதனங்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இவற்றில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ரூ.6500 வரை செலுத்த வேண்டும்.
2017 ஐபோன் மாடல்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் பெற கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்
Published on

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X சாதனங்களை செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபோன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்ட நிலையில் இந்த வசதியை பெற வாடிக்கையாளர்கள் ரூ.6,500 வரை கூடுதலாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X வாங்குவோருக்கு ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட மாட்டாது என்பதால் வாடிக்கையாளர்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் செய்ய பிரத்தியேக சார்ஜர் மற்றும் கேபிள் வாங்க வேண்டும். ஒரு உயர் ரக பவர் சார்ஜர் அல்லது யு.எஸ்.பி. டைப்-சி லைட்னிங் கேபிள் வாங்க வேண்டும்.

இந்தியாவில் 29 வாட் சார்ஜர் ரூ.5500க்கு விற்பனை செய்யப்படுகிறது, யு.எஸ்.பி.-சி லைட்னிங் கேபிள் வாங்கும் போது ரூ.1200 செலுத்த வேண்டும். இதனால் ரூ.64,000 செலுத்தி ஐபோன் 8 அல்லது ரூ.89,000 செலுத்தி ஐபோன் X வாங்குவோர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பயன்படுத்த கூடுதலாக ரூ.6500 செலுத்த வேண்டும்.

ஆண்ட்ராய்டு சந்தையில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் சார்ஜர்களும் வழங்கப்படுகிறது. இதே நிலை பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் துவங்கி விலை உயர்ந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வரை எல்லாவற்றிற்கும் பொருந்துகிறது. அந்த வகையில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி அறிவிக்கப்பட்ட ஐபோன்களில் இந்த அம்சம் தனியே பணம் செலுத்தி வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய ஐபோன்களுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை செலவிடும் ஐபோன் ப்ரியர்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி பெற தனியே பணம் செலுத்தும் அவர்களுக்கு அசௌகரிய சூழ்நிலையை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனங்களுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் சாதனங்களையும் வழங்கி இருக்கலாம்.

எனினும் புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கியதும், பெல்கின் போன்ற நிறுவனங்கள் மலிவு விலை ஃபாஸ்ட் சார்ஜர்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்பிள் உள்பட பல்வேறு நிறுவனங்களும் தங்களது சாதனங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் சாதனங்களையே பயன்படுத்த அறிவுறுத்துகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com