ஊக்க மருந்து சர்ச்சை - இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவின் இடைநீக்கம் ரத்து

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு மீதான தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தெரிவித்துள்ளது. #SanjitaChanu #Weightlifter
ஊக்க மருந்து சர்ச்சை - இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவின் இடைநீக்கம் ரத்து
Published on

புதுடெல்லி:

காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற சாதனையாளரான இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவு கடந்த ஆண்டு மே 15-ந் தேதி வெளியானது. அதில் சஞ்சிதா சானு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான ஊக்க மருந்து புகாரை சஞ்சிதா சானு திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன் தன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று அவர் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்திடம் முறையிட்டார். மே மாதம் இறுதியில் சஞ்சிதா சானுவின் ஊக்க மருந்து சோதனையில் (மாதிரியில் மாற்றம்) தவறு நடந்து விட்டதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளம் ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில் சஞ்சிதா சானு மீதான தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று அதிகாரபூர்வமாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மணிப்பூரை சேர்ந்த 25 வயதான சஞ்சிதா சானு கூறுகையில், ‘எனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச பளுதூக்குதல் சம்மேளன விசாரணை கமிட்டியிடம் இருந்து சாதகமான முடிவு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதேநேரத்தில் இந்த சம்பவத்தால் நான் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இந்த சோகத்தால் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதுடன், எனது ரெயில்வே வேலையையும் ராஜினாமா செய்து விடலாமா? என்று கூட நினைத்தேன். என்னால் சரியாக சாப்பிட முடியாமல் போனதுடன், தூக்கத்தையும் தொலைத்தேன். எனது வாழ்க்கை அர்த்தமற்றதானது. மீண்டும் களம் திரும்பி நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த ஆண்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவும், 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவும் விரும்புகிறேன்’ என்றார்.  #SanjitaChanu #Weightlifter

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com