ரூ.2,000 நோட்டு பதுக்கலா?: கர்நாடகா - ஆந்திராவில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை

நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கர்நாடகா, ஆந்திராவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ரூ.2,000 நோட்டு பதுக்கலா?: கர்நாடகா - ஆந்திராவில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை
Published on: 

ரூ.2000 நோட்டுகள் பதுக்கல் தொடர்பாக கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாததாக அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவியது.

பழைய நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட சில வாரங்கள் கழித்தே புதிதாக ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. அதன் பிறகு பல மாதங்கள் கழித்து ரூ.100, 50 நோட்டுகள் வெளியிடப்பட்டன.

கள்ள நோட்டுகளையும், செல்லாத நோட்டுகளையும் ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

மேலும் சட்டவிரோத பண பரிமாற்றங்களை கண்காணிக்கவும், தடுக்கவும் வங்கிகளில் பண பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றி நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வங்கிகளில் ரொக்க பண பரிவர்த்தனைக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவது குறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. ஒரு சில வங்கி ஏ.டி.எம்.கள் மட்டுமே இயங்குகிறது. அதிலும் சில மணி நேரங்களில் பணம் இல்லாமல் காலியாகி விடுகிறது.

ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் அளவை ரிசர்வ் வங்கி குறைத்து விட்டதால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் வழக்கத்துக்கு மாறாக சில பகுதிகளில் பணத் தேவை அதிகரித்து இருப்பதாகவும், இதன் காரணமாகவே ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதில் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாகவும், பணத்தட்டுப்பாட்டை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ரூ.2000 நோட்டுகள் பதுக்கல்காரர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், ரூ.2000 நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாலேயே பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் பண புழக்கம் அதிகரித்து இருப்பதாக வந்த தகவலின் பேரிலேயே நிதி அமைச்சகம் சில நடவடிக்கைகளை எடுத்து இருப்பதால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தில் பண புழக்கத்தை தேர்தல் பார்வையாளர்கள் கண்காணித்து வரும் நிலையில் வேறு பாதை வழியாக அங்கு பணம் செல்லாமல் தடுப்பதற்காகவே மற்ற மாநிலங்களிலும் பண நடமாட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் ரூ.2000 நோட்டுகள் பதுக்கல் தொடர்பாக கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சந்தேகப்படும் இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களில் மட்டும் இரு மாநிலங்களிலும் 30 முதல் 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தில் தேர்தல் நடப்பதால் பணப்புழக்கம் மற்றும் பணம் பதுக்கலை தடுக்கவே இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. ஆந்திரா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களிலும் வருமான வரி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பணத் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ரிசர்வ் வங்கி ரூ.45,000 கோடி நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது.

X