

* இந்த ஆட்டத்தில் கோலியும், ரோகித் சர்மாவும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 230 ரன்கள் சேகரித்தனர். இவர்கள் ஜோடியாக 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 4-வது நிகழ்வாகும். 46 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக முறை இரட்டை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் உருவாக்கி தந்த ஜோடி என்ற மகிமையை இவர்கள் பெற்று இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து விராட் கோலி- கவுதம் கம்பீர் (இந்தியா), சச்சின் தெண்டுல்கர்- சவுரவ் கங்குலி (இந்தியா), ஜெயவர்த்தனே-உபுல் தரங்கா (இலங்கை) ஆகிய ஜோடிகள் தலா 3 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறது.
* இந்த மோதலில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் 30 வயதான ரோகித் சர்மா எடுத்த 147 ரன்களில் 2 சிக்சர்களும் அடங்கும். இத்துடன் அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 150 ஆக (165-வது இன்னிங்ஸ்) உயர்ந்தது. 150 சிக்சர்களை வேகமாக துவம்சம் செய்த 2-வது வீரர் ரோகித் சர்மா ஆவார். பாகிஸ்தானின் அப்ரிடி 160 இன்னிங்சில் இதை எட்டி முதலிடத்தில் உள்ளார்.
* கான்பூர் கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இரண்டு செஞ்சுரி அடித்த முதல் வீரர் ரோகித் சர்மா தான். ஏற்கனவே இங்கு 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 150 ரன்கள் குவித்திருந்தார்.
* நியூசிலாந்து தொடக்க வீரர் மார்ட்டின் கப்திலின் விக்கெட்டை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்திய போது அது அவரது 50-வது விக்கெட்டாக (28 ஆட்டம்) அமைந்தது. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கருக்கு (23 ஆட்டம்) அடுத்து வேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்தியராக பும்ரா ஜொலித்துள்ளார்.