துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை- 22 பதக்கங்களுடன் 2-வது இடம் பிடித்தது இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. #ISSFJuniorWorldCup
துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை- 22 பதக்கங்களுடன் 2-வது இடம் பிடித்தது இந்தியா
Published on

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 19-ம் தேதி தொடங்கி நேற்று (29-ம் தேதி) வரை நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர் - வீராங்கனைகளை பதக்கங்கள் வென்று அசத்தினர்.

ஜூனியர் பெண்களுக்காக 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் இளவேனில், ஷ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோர் இணைந்து 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை மனு பேகர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியில் இந்திய வீராங்கனைகளான மனு பேகர், தேவன்ஷி ரானா, மஹிமா துர்கி அகர்வால் ஆகியோர் அடங்கிய அணி தங்கப்பதக்கம் வென்றது.

ஆண்களுக்கான ஷாட்கன் பிரிவில் நடைபெற்ற குழு போட்டியில் இந்தியாவின் எலாகி - கீர் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கத்தையும், மற்றொரு இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.

இதேபோல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீரர் கவுரவ் ரானா வெள்ளிப்பதக்கம் வென்றார். வெண்கலப்பதக்கத்தை மற்றொரு இந்திய வீரர் அன்மோல் தட்டிச்சென்றார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுடா வெண்கலப்பதக்கம் வென்றார். டிராப் கலப்பு குழு பிரிவு போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீரர் அனிஷ் தங்கப்பதக்கம் வென்றார். இதே பிரிவில் நடைபெற்ற குழு போட்டியில் இந்திய வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். பெண்களுக்கான 

25 மீட்டர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை முஸ்கான் தங்கப்பதக்கம் வென்றார். பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் குழு பிரிவு போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. 

ஆண்களுக்கான ஷாட்கன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் விவான் கபூர்(16) வெண்கலப்பதக்கம் வென்றார். இதே பிரிவில் நடைபெற்ற ஆண்கள் குழு போட்டியில் இந்திய வீரர்களான விவான் கபூர், லக்‌ஷய், அலி அமான் எலாகி ஆகியோர் இணைந்து வெண்கலப்பதக்கம் வென்றனர். ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவு போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. பெண்களுக்கான ஸ்கீட் போட்டியில் இந்திய வீராங்கனை கனேமாட் செக்கோன் வெண்கலப்பதக்கம் வென்றார். 

இதன்மூலம், இந்தியா 9 தங்கம், 5 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்தது. சீனா 9 தங்கம், 8 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது.

முன்னதாக இம்மாத தொடக்கத்தில் மெக்சிகோவில் நடைபெற்ற சீனியர் துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. #ISSFJuniorWorldCup

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com