தஞ்சை மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 399 ஆக அதிகரிப்பு

தஞ்சை மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்களின் எண்ணிக்கை இன்று 399 ஆக அதிகரித்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தஞ்சாவூர்:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தியாவில் இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏராளமானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி வந்தவர்கள் சுகாதாரத்துறை மூலம் 28 நாட்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த 20-ம் தேதி வரை வந்திருந்த 248 பேரில் 100 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. மீதமுள்ள 148 பேர் சுகாதாரத்துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

28 நாட்கள் கண்காணிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் இடது கையில் முத்திரை வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 224 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 399 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு இன்று காலை வரை 516 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 117 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. இவர்களுக்கு நோய் தொற்று அறிகுறி இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மீதமுள்ள 399 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா? என பரிசோதனை நடந்து வருகிறது. அப்படி ஏதேனும் யாருக்காவது நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சுகாதாரத்துறை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே வெளிமாநிலத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க 1077 என்ற கட்டுப்பாட்டு எண் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கட்டுப்பாட்டு எண் வழியாகவும், வருவாய்த்துறை மற்றும் பிறதுறைகள் நடத்திய கணக்கெடுப்பின்படியும் 104 பேர் வெளிமாநிலங்களில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com