கொரோனா தடுப்பூசி திட்டத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு

ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வது அவசியமாகிறது.
ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல்
ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல்
Published on

திருப்பூர்:

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஏ.இ.பி.சி.,) 42-வது பொதுக்குழு கூட்டம்  வீடியோ கான்பரன்சிங் மூலம்  நடைபெற்றது. இதில் கவுன்சில் தலைவரான திருப்பூரை சேர்ந்த சக்திவேல் தலைமைவகித்தார். திருப்பூர் உள்பட நாடு முழுவதும்  உள்ள ஆடை ஏற்றுமதி துறையினர் பங்கேற்றனர். அப்போது ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் பேசிய தாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு  ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த தைரியத்தையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. பிரதமர் திட்ட மிட்டபடி நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வர்த்தகம் ரூ.30 லட்சம் கோடி என்கிற இலக்கை நிச்சயம் எட்டிப்பிடித்து விடும்.

கொரோனா தடுப்பூசி திட்டத்துக்குப்பின், மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் ஆடை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டைவிட நடப்பு ஆண்டு கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில்  நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 91 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு  ஜனவரி முதல் மே வரையிலான மாதங்களில் அமெரிக்காவுக்கான இந்திய ஆடை ஏற்றுமதி 22 சதவீதம்,  ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து, சவுதி அரேபியா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற இதர நாடுகளுக்கான ஏற்றுமதியும் உயர்ந்துவருகிறது. மத்திய அரசு  முக்கியமான 13 துறைகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.,) திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன்மூலம், நிறுவனங்களின் உற்பத்தி திறன் அதிகரிக்கும், ஏற்றுமதி உயரும். பி.எல்.ஐ., திட்டத்தில்  ரூ.10,683 கோடி ஜவுளித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் செயற்கை இழை ஆடை உற்பத்தி மேம்படும்.

ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளுடன் வரி யில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வது அவசியமாகிறது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை, ஜவுளி அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com