தமிழகத்தில் ‘நீட்’டுக்கு மாணவர்கள் மட்டுமல்ல, ரூ.19 கோடியும் காவு கொடுக்கப்பட்டுள்ளது

நீட் தேர்வுக்காக தமிழகம் காவு கொடுத்தது அனிதா, பிரதீபா என்ற விலை மதிக்க முடியாத உயிர்களை மட்டுமல்ல, அதற்காக பள்ளி வளர்ச்சி குழுமம் ஒதுக்கிய மக்கள் பணம் ரூ.19 கோடியையும்தான். #NEET #NeetKillsPradeeba
தமிழகத்தில் ‘நீட்’டுக்கு மாணவர்கள் மட்டுமல்ல, ரூ.19 கோடியும் காவு கொடுக்கப்பட்டுள்ளது
Published on

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை ‘நீட்’ பயமுறுத்துகிறது. அதை எதிர்கொள்ளும் ஆற்றலையும், திறமையையும் நமது கல்வி முறை வழங்கவில்லை என்பது உண்மை.

எப்படியாவது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு பெற்று விடுவோம் என்று அரசியல் கட்சிகள் கூச்சல் போட்டதை நம்பி கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்கள் கோட்டை விட்டார்கள்.

ஆனால் இந்த ஆண்டு மாணவர்கள் அச்சப்பட தேவை இல்லை. நீட் தேர்வுக்காக பயிற்சி மையங்கள் அமைத்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அகில இந்திய அளவில் போட்டி போடும் அளவுக்கு இந்த பயிற்சி மையங்கள் மூலம் மாணவர்கள் தயார் படுத்தப்படுவார்கள் என்று கடந்த ஆண்டே அரசு அறிவித்தது. அந்த வார்த்தையே தேன் தடவியது போல் இனித்தது. ஆனால் நடந்திருப்பது மிகவும் கசப்பான நிகழ்வுகள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டும் நீட் தேர்வுக்காக பிரதீபா என்ற மாணவி காவு கொடுக்கப்பட்டார். ஏற்கனவே ஒருமுறை நீட் தேர்வில் வெற்றி பெற்றும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் அளவுக்கு மதிப்பெண் கிடைக்காததால் பிரதீபா மீண்டும் நீட் தேர்வு எழுதி இருக்கிறார். இதற்காக பயிற்சியும் பெற்று இருக்கிறார். அப்படி இருந்தும் 39 மதிப்பெண்தான் பெற்று இருக்கிறார்.

இவ்வளவு குறைவான மதிப்பெண் பெறும் அளவுக்கு பிரதீபா மக்கு மாணவி அல்ல. 10-ம் வகுப்பில் 490 மதிப்பெண்ணும், பிளஸ்-2வில் 1125 மதிப்பெண்ணும் பெற்றவர்.

நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் 35-வது இடத்தை பெற்று கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று தலைகுனிந்து நிற்கிறது. இந்தியாவிலேயே மிகவும் பின் தங்கிய மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களெல்லாம் தலைநிமிர்ந்து நிற்கின்றன.

நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் ஒன்றியங்கள் தோறும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும், அந்த வகையில் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த பயிற்சி மையங்கள் தெடங்கப்பட்டதாகவும் அதில் பயிற்சி பெற்றவர்கள் 1337 பேர் வெற்றி பெற்று இருப்பதாகவும் கல்வித்துறையின் ஏட்டுக் கணக்கு சொல்கிறது. ஆனால் ஒரு மாணவர் கூட அரசு ஒதுக்கீட்டு இடத்தை பெறும் அளவுக்கு மதிப்பெண் பெறவில்லையே!

இதுபற்றி விசாரித்தபோதுதான் முறையாக பயிற்சி மையங்கள் செயல்படவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மொத்தம் 412 பயிற்சி மையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் ஒன்றியங்கள் வாரியாக பயிற்சி மையங்கள் தொடங்க வேண்டும். ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த அறைகளை கற்றல், கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் சீரமைக்க வேண்டும். 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். திறமையான அந்த முதுகலை ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும். வி-சாட் தொழில்நுட்பத்தில் இணைய வழி கற்றலுக்கு ஏற்ற வகையில் அனைத்து பயிற்சி மையங்களிலும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும்.

பாட வாரியாக கால அட்டவணை தயாரித்து பாடம் நடத்த வேண்டும். மாதிரி பயிற்சி கையேடு வழங்க வேண்டும். மாதிரி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மையத்தில் இருந்து ஒளிபரப்பு செய்ய வேண்டும். அப்போது மாணவர்கள் கேள்விகள் கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்காக படக்காட்சி ஒளிப்பதிவு கருவி, கம்ப்யூட்டர் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள், பயிற்றுனர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட செலவுகளுக்கு பள்ளி வளர்ச்சி குழுமம் ரூ.19 கோடியை ஒதுக்கியது.

ஆனால் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிக குறைவாகவே பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை. இந்த குறைபாடுகள்தான் மாணவர்களை சாதிக்க முடியாமல் ஆக்கி விட்டது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com