

போடி:
இடுக்கி மாவட்டத்தில் பந்த் காரணமாக போடி முந்தல் சோதனைச்சாவடியில் தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.
கேரள மாநிலத்தில் கல்வி கட்டணம் உயர்வை கண்டித்து இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணியில் போலீசாருக்கும், இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை கலைந்து செல்ல போலீசார் தடியடி நடத்தியதால் வன்முறை வெடித்தது.
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இச்சம்பவத்தில் போலீசாரின் தாக்குதலை கண்டித்து இன்று இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியினர் அறிவித்திருந்தனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், போடி, உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு தினசரி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
இடுக்கி மாவட்டத்தில் பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து போடி முந்தல் வழியாக கேரள எல்லைக்கு சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.
சோதனைச்சாவடியின் அருகே தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.