

புதுடெல்லி:
ஹூன்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் தனது அடுத்த தலைமுறை வெர்னா மாடலின் இரண்டு புதிய வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அந்த வகையில் புதிய வெர்னா மாடலில் 1.4 லிட்டர் கப்பா டூயல் VTVT பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய இன்ஜின் வெர்னா பேஸ் E மற்றும் EX மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய இன்ஜின் காரின் மைலேஜ் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் கிடைக்கிறது. புதிய மோட்டார் 100 பி.எஸ். பவர் 6000 ஆர்.பி.எம்., 132 என்.எம். டார்கியூ 4000 ஆர்.பி.எம். கொண்டிருக்கிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது 8 சதவிகிதம் வரை மேம்படுத்தப்பட்டு புதிய மோட்டார் லிட்டருக்கு 19.1 கிலோமீட்டர் வரை செல்லும்.
ஏற்கனவே இந்த கார் 1.6 லிட்டர் காம்மா பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் U2 CRDi டீசல் இன்ஜின், இரண்டு இன்ஜின்களிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் மாடல் 123 பி.எஸ். 6400 ஆர்.பி.எம். மற்றும் 151 என்.எம். டார்கியூ 4850 ஆர்.பி.எம். வழங்குகிறது. இந்த மாடல் லிட்டருக்கு 17.7 கிலோமீட்டர் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) வரை செல்லும்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஹூன்டாய் வெர்னா இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக உருவெடுத்தது. இத்துடன் 2018 தலைசிறந்த இந்திய கார் என்ற விருதை வென்றுள்ளது.
பேஸ் மாடலின் முன்பக்கம் டூயல் ஏர்பேக், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், சென்ட்ரல் லாக்கிங், பகல் மற்றும் இரவு நேரத்தில் பார்க்க வழி செய்யும் ரியர்-வியூ கண்ணாடி, கிளட்ச் லாக், சீட் பெல்ட் பிரீ-டென்ஷனர்ஸ், இம்மொபலைசர் மற்றும் ஐசோஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஹூன்டாய் வெர்னா EX மாடலில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள், முன்பக்கம் ப்ரோஜெக்டர் ஃபாக் லேம்ப், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப் மற்றும் எஸ்கார்ட் அம்சம், ஸ்பீட் சென்சிங் ஆட்டோ டோர் லாக், இம்பேக்ட் சென்சிங் டோர் அன்லாக் மற்றும் பின்புறம் டீஃபாகர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய இன்ஜின் கொண்ட ஹூன்டாய் வெர்னா E விலை ரூ.7,79,990 என்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட EX மாடல் ரூ.9,09,990 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.