ஊத்துக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஊத்துக்கோட்டையில் நேற்று மாலை பயங்கர சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
ஊத்துக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை
Published on

ஊத்துக்கோட்டை:

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கும் முன்பே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் அளவு சதம் அடித்தது.

அக்னி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கிய பின்னர் வெயிலின் தாக்கம் மேலும் உக்கிரம் அடைந்தது.

வெயிலின் கோரத்தாண்டவத்தால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதையும், வாகனம் ஓட்டுவதையும் தவிர்த்து வந்தனர்.

கோடை மழை பெய்யாதா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். பல்வேறு கோவில்களில் வருண பகவானுக்கு சிறப்பு யாகங்களும் நடந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்தன. இடி- மின்னலுடன் பெரும்பாலான இடங்களில் சாரல்மழை பெய்தது.

இதேபோல் ஊத்துக்கோட்டையில் நேற்று மாலை பயங்கர சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை நீடித்தது. கத்திரி வெயில் வாட்டி எடுத்த நிலையில் இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழையை பொருட்படுத்தாமல் அவர்கள் ஆலங்கட்டிகளை சமையல் பாத்திரங்கள் மற்றும் டப்பாக்களில் சேமித்து வைத்து கொண்டனர்.

சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த மாம்பழங்கள் கீழே விழுந்தன. இதனால் மா விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதே போல் செங்கல் சூளையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

பலத்த மழை காரணமாக ஊத்துக்கோட்டை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

சூறை காற்றின் வேகத்தில் ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதன் காரணமாக நேற்று இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், பாலவாக்கம், தச்சூர், சீத்தஞ்சேரி, பெருஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் இன்று காலை வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதேபோல் பெரிய பாளையம், காஞ்சீபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், அச்சரப்பாக்கம் பகுதியிலும் நல்ல மழை பெய்தது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com