கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆரஞ்சு மண்டலத்துக்கு கோவை மாவட்டம் வந்தது எப்படி?- அதிகாரி விளக்கம்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராகி வருகிறது. சிவப்பு மண்டலத்தில் இருந்து கோவை மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு வந்தது எப்படி? என்பது பற்றி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
Published on

கோவை:

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாவட்டம் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்படுகின்றன. அந்த மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா தொற்று உறுதியானது மற்றும் எத்தனை நாளில் தொற்று 2 மடங்கு அதிகரித்தது ஆகியவற்றின் அடிப்படையில் அவை பிரிக்கப்படுகின்றன.

தற்போது குணமானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாவட்டங்கள் வேறு அடிப்படையில் மண்டலங்களாக பிரிக்கப்படுகின்றன. இதற்கான விதிமுறைகளை மத்திய மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை மாற்றி அமைத்து உள்ளது. மாவட்டத்தில் மாநகராட்சி தனியாகவும், புறநகர் தனியாகவும் பிரிக்கப்படுகிறது. இதில் ஏதாவது ஒன்று சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறினாலும் ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 25 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மேட்டுப்பாளையத்தில் உள்ள 12 வார்டுகளில் வசித்த 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது குணமாகி வீடு திரும்பி விட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து இதுநாள் வரை புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. அந்த பகுதியில் மொத்தம் 28 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என்றால் வருகிற 8-ந் தேதி மேட்டுப்பாளையம் பச்சை மண்டலத்துக்கு சென்று விடும்.

இதேபோல சாய்பாபா காலனி கே.கே.புதூரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து மீண்டு வந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி கடந்த மாதம் முதல் வாரம் ‘சீல்’ வைக்கப்பட் டது. அதன்பின்னர் புதிய தொற்று அந்த பகுதியில் உறுதியாகவில்லை. வருகிற 8-ந் தேதி வரை புதிய தொற்று உறுதியாகவில்லை என்றால் அந்த பகுதியும் பச்சை மண்டலத்துக்கு சென்று விடும்.

கோவை மதுக்கரை, விளாங்குறிச்சி, சூளேஸ்வரன்பட்டி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 10-ந் தேதியும், வின்சென்ட் ரோடு, காந்தி பார்க், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 12-ந் தேதியும், பொள்ளாச்சி மீனாட்சிபுரத்தில் 13-ந் தேதியும், வேட்டைக்காரன்புதூரில் 15-ந் தேதியும், எஸ். குமாரபாளையத்தில் 16-ந் தேதியும், ஆத்துப்பொள்ளாச்சி, ஊஞ்ச வேலம்பட்டியில் 18-ந் தேதியும், அன்னூரில் ஏப்ரல் 20-ந் தேதியும், குனியமுத்தூர், சிறுமுகை, போத்தனூர் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 23-ந் தேதியும் கொரோனா தொற்று உறுதியானது என்று அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வருகிற 9-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மொத்தம் 28 நாட்கள் புதிய தொற்று இல்லை என்றால் அந்த பகுதிகள் பச்சை மண்டலத்துக்கு சென்று விடும். கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்து புதிய தொற்று இல்லாததாலும், தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 15-க்குள், அதாவது 9 பேர் சிகிச்சை பெற்று வருவதாலும் கோவை மாவட்டம் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்துக்குள் வந்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதிக்கு பிறகு மொத்தமே 12 பேர் தான் கொரோனா தொற்று உறுதியானவர்கள் என்பதால் கோவை மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்குள் வந்துள்ளது. மண்டலத்தை தீர்மானிக்க முன்பு மத்திய அரசு ஒரு அளவுகோல் தான் வைத்திருந்தது. ஆனால் தற்போது 4 அளவுகோல் வைத்துள்ளது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com