சின்னாளபட்டியில் 2 வீடுகளில் நகை, பணத்தை அள்ளி சென்ற கொள்ளையர்கள்

சின்னாளபட்டியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தை அள்ளி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு
Published on

சின்னாளபட்டி:

திண்டுக்கல்-மதுரை சாலை செட்டியபட்டி பிரிவு அக்சயா நகரில் வசித்து வருபவர் பாஸ்கரன். வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் பணியில் உள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் ஸ்டீபன் ஜேசுராஜ்.

நேற்று காலை இவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். மீண்டும் மாலையில் வீடு திரும்பிய போது பாஸ்கரனின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் ஸ்டீபன் ஜேசுராஜ் வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருந்தது. 2 வீடுகளிலும் 20 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் கொள்ளை போயிருந்தது.

இது குறித்து சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சின்னாளப்பட்டி வடக்குத் தெருவில் உள்ள கோவிலிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அஞ்சலி வரத அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை ஆடி-18-ஐ முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு இந்த கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் மூலஸ்தானத்தில் அம்மனுக்கு நகைகள் அணிவிக்கப்பட்டு இருக்கலாம் என கருதி அதனை உடைக்க முயன்றனர். ஆனால் முடியாததால் கோவில் மரக்கதவுக்கு தீ வைத்தனர். கதவு எரிந்த பிறகு உள்ளே சென்று கொள்ளையடிக்க காத்திருந்தனர். ஆனால் கோவிலில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.

சின்னாளபட்டி- செம்பட்டி சாலையில் விசித்து வருபவர் வேல்ராஜ் (60). இவர் ரெயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் வேல்ராஜ் புது வீடு கட்டி கிரகபிரவேசம் செய்து முடித்தார். தற்போது அவர் சென்னையில் தங்கி ரெயில்வே காண்டிராக்ட் பணிகள் பார்த்து வருகிறார். வீட்டில் வாட்ச்மேன் மட்டும் காவலுக்கு இருந்துள்ளார். சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள்ளும் புகுந்த கொள்ளையர் பீரோவை உடைத்தனர்.

ஆனால் அங்கு பணம் மற்றும் நகை எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சென்று விட்டனர்.

சின்னாளபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக தொழில் அதிபர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீடுகளை குறி வைத்து கொள்ளை நடந்து வந்தது. இதனை தடுக்க போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு வந்தனர்.

மேலும் சைரன் பொருத்திய மோட்டார் சைக்கிள் வாகனம் மூலம் அதிக அளவு திருட்டு நடக்கும் பகுதிகளை கண்காணித்து வந்தனர். ஆனால் தற்போது அதுபோன்ற ரோந்து பணி செய்வதில்லை.

முக்கிய பகுதிகளில் இருந்த புறக்காவல் மையத்திலும் போலீசார் இல்லை. ஆனால் அப்பாவி மக்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அவர்களை மறித்து ஹெல்மெட் பிரச்சினைக்காக வசூல் செய்வதில் மட்டுமே அக்கறையுடன் செயல்பவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே மீண்டும் தலைதூக்கி உள்ள கொள்ளை சம்பவங்களை தடுக்கவும் கொள்ளையர்களை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com