ராணுவ அதிகாரிக்கு ரூ.74 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

விபத்தில் முழு உடல் ஊனமடைந்த ராணுவ அதிகாரிக்கு ரூ.74 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராணுவ அதிகாரிக்கு ரூ.74 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்குமார் (வயது 34) இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றினார். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 2007-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த மோகன்குமார் திருப்பத்தூர் அருகே வாகனத்தில் சென்றபோது மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மோகன்குமார் படுகாயமடைந்து வேலூரிலும், சென்னையிலும் சிகிச்சை பெற்றார்.

சிகிச்சை அளித்த டாக்டர்கள், மோகன்குமாருக்கு 90 சதவீத ஊனம் என்று சான்றிதழ் அளித்தனர். காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு திருப்பத்தூரில் உள்ள மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் மோகன்குமார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மோகன்குமாருக்கு ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 137 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று 2012-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

இந்த இழப்பீட்டு தொகை போதாது என்று சென்னை ஐகோர்ட்டில் மோகன்குமார், அவரது மனைவி மைதிலி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

விபத்தில் பாதிக்கப்பட்ட மோகன்குமார் ராணுவ பணியில் ஈடுபட்டவர். அவரது உடலை பரிசோதித்த புனேவில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரி, அவர் 100 சதவீதம் உடல் ஊனம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது. இனிமேல் அவரால் எந்த ஒரு பணியும் செய்யமுடியாது. ராணுவ பணியிலிருந்து அவர் 2010-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

அவரது மனைவி தான் இனிமேல் அவருக்கு எல்லாம். இதுபோன்ற சூழ்நிலையில் குறைந்த வயதில் ஒரு பெண் மனதளவில் என்ன பாடுபடுவார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அதனால் சட்டம் மற்றும் வக்கீல்களின் வாதங்களை மட்டுமே கணக்கில் எடுத்து தீர்ப்பு அளிக்கக்கூடாது. அதையும் தாண்டி சமூக நலன் சார்ந்த சட்டத்தையும் கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மோகன்குமாரின் நிலை மிகவும் வருத்தப்படக்கூடியது. மோகன்குமார் வாங்கிய மாத சம்பளம், மருத்துவ செலவு உள்ளிட்ட காரணிகளை கணக்கில் கொண்டு அவருக்கு மொத்தமாக ரூ.73 லட்சத்து 82 ஆயிரத்து 137 இழப்பீடாக வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com