ஆவணங்களை தாக்கல் செய்ய டிடிவி தினகரன் அணிக்கு கூடுதல் அவகாசம் கிடைக்குமா? - இன்று தீர்ப்பு

இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டு டிடிவி தினகரன் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
ஆவணங்களை தாக்கல் செய்ய டிடிவி தினகரன் அணிக்கு கூடுதல் அவகாசம் கிடைக்குமா? - இன்று தீர்ப்பு
Published on

மதுரை:

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ஒன்றிணைந்த எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளனர்.

கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. அத்துடன், இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை திட்டமிட்டபடி அக்டோபர் 6-ம் தேதி தொடங்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

எனவே, கூடுதல் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் தரப்பு மனு தாக்கல் செய்தது. அதில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம் அளிக்க உத்தரவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தை வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக தேர்தல் ஆணையம் நாளை இறுதிக்கட்ட விசாரணையைத் தொடங்க உள்ள உள்ள நிலையில், டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, டிடிவி தினகரன் தரப்பிற்கு கூடுதல் அவகாசம் கிடைக்குமா? இல்லையா? என்பது இன்று பிற்பகல் தெரியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com