

மதுரை மேலூரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், புயலில் சாய்ந்த தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே போல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்பவரும் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘கஜா’ புயல் பாதித்த பகுதியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், மீட்பு பணியில் முப்படையினரையும், துணை ராணுவத்தினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தஞ்சை பேராவூரணியைச் சேர்ந்த முருகேசன், புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 5-ந் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புகைப்பட ஆதாரம் இல்லாவிட்டாலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 12-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு வக்கீலிடம், கஜா புயல் பாதிப்புக்கு முழுமையாக மத்திய அரசு நிதி வழங்காதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.