தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 28-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று காலை 11.45 மணியுடன் முடிந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை விவரம் வருமாறு:-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 7 செ.மீ. மழையும், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நீலகிரி மாவட்டம் திருப்பூர், குன்னூர் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 4 செ.மீ. மழையும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், நீலகிரி மாவட்டம் கெட்டி, விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com