கேரளாவில் கனமழைக்கு 8 பேர் பலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் கனமழை காரணமாக கோழிக்கோடு, கண்ணூர், கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ள காட்சி.
வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ள காட்சி.
Published on

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் மழைக்கு 8 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். எர்ணாகுளம் பகுதியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த தமிழகத்தின் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார். அவரது நண்பர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கண்ணூரில் மணிக்கடவு என்ற பகுதியில் நிதிஷ் என்பவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார். அதேப்போல கிடங்கநல்லூர் பகுதியிலும் பிஜூ என்பவர் ஆற்றில் மூழ்கி பலியானார். கோட்டயம் பகுதியில் மனோஜ் என்ற ஆட்டோ டிரைவர் மாயமாகி இருந்தார். தற்போது அவரது உடல் ஆற்றில் மிதந்தது கண்டெடுக்கப்பட்டது.

அதேப்போல திருச்சூரில் விஷ்ணு என்ற 19 வயது மாணவர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார். ஏற்கனவே மழைக்கு 3 பேர் பலியாகி இருந்தனர்.

மழையால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 17 முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் 260 குடும்பங்களை சேர்ந்த 1142 பேர் தஞ்சமடைந்து உள்ளனர். மழைக்கு 36 வீடுகள் இடிந்து உள்ளன. பேரிடர் மேலாண்மை குழுவினர் மாநிலம் முழுவதும் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

காசர்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. கண்ணூரில் 9.7 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக கோழிக்கோடு, கண்ணூர், கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

மேலும் 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்றும், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com