ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி: செங்கல்பட்டு மகளிர் கோர்ட் தீர்ப்பு

ஹாசினி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகளிர் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. #Hassinimurdercase #daswant
ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி: செங்கல்பட்டு மகளிர் கோர்ட் தீர்ப்பு
Published on

செங்கல்பட்டு:

மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதேபகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை தனியாக செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடந்தது.

இந்தநிலையில் ஹாசினி கொலை வழக்கில் இறுதிகட்ட விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் தினமும் நடந்துவந்தது. 30 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 14-ந்தேதி வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி வேல்முருகன் அறிவித்தார். 

அதன்படி இன்று ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.  தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதிமன்ற அறைக்குள் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். செய்தியாளர்கள் மற்றும் பிற வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

தஷ்வந்த் ஏற்கனவே நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டதால், இன்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டான். இதையடுத்து நீதிமன்ற அறையின் கதவுகள் மூடப்பட்டன. 

பின்னர்  தீர்ப்பு தொடர்பான இறுதி விவாதம் நடைபெற்றது. அப்போது தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கும்படி அரசுத் தரப்பு மற்றும் சிறுமியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்கள்  வேண்டுகோள் விடுத்தனர். 

இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார் நீதிபதி வேல்முருகன். அப்போது, ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என்று அறிவித்தார். அப்போது தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு தஷ்வந்த் கேட்டுக்கொண்டார். இதையடுத்து தண்டனை விவரத்தை ஒரு மணி நேரம் கழித்து வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார். #tamilnews #Hassinimurdercase #daswant

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com