குட்கா விவகாரம்: உரிமைக்குழு அனுப்பிய புதிய நோட்டீசை எதிர்த்து ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் ரிட் மனு தாக்கல்

குட்கா விவகாரத்தில் தமிழக சட்டசபை உரிமைக்குழு அனுப்பிய புதிய நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி அன்று சட்டப்பேரவையில் குட்கா பாக்கெட்டுகள் மற்றும் புகைப்படங்கள் காட்டப்பட்டது தொடர்பாக உரிமைக்குழு நோட்டீஸ் வழங்கி இருந்தது.

இதை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீதான வழக்கில் கடந்த 25.8.2020 அன்று, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 7.9.2020 அன்று கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக் குழு, 19.7.2017 (மூன்றாண்டுகளுக்கு முன்னர்) அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மீண்டும் விவாதித்ததாகக் கூறி தமிழகச் சட்டப்பேரவைச் செயலாளர், தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, 14.9.2020 அன்று தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய நோட்டீஸ்களின் நோக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நடைபெற உள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதில் இருந்து தடுப்பதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாகக் கையாண்ட விவகாரத்தைச் சட்ட மன்றத்தில் எழுப்புவதைத் தவிர்க்கவுமே என்பது தெளிவாகிறது.

எனவே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் இந்தப் புதிய நோட்டீஸ்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் புதிய ரிட் மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com