

காந்தி நகர்:
குஜராத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காந்தி நகரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல், மாநில உள்துறை மந்திரி பிரதீப்சின் ஜடேஜா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்ற ஹாடியா-ஜமால்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கிடவாலாவுக்கு நேற்று மாலை கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் முதல்-மந்திரி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில், முதல்வர் விஜய் ரூபானி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எம்எல்ஏ இம்ரானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை தனிமைப்படுத்திக்கொண்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.