சினிமா டிக்கெட் மீதான சரக்கு, சேவை வரி 18 சதவீதமாக குறைப்பு - 66 பொருட்களுக்கு வரி குறைகிறது

ரூ.100 மற்றும் அதற்கு குறைவான சினிமா டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இன்சுலின் உள்ளிட்ட 66 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி குறைகிறது.
சினிமா டிக்கெட் மீதான சரக்கு, சேவை வரி 18 சதவீதமாக குறைப்பு - 66 பொருட்களுக்கு வரி குறைகிறது
Published on

ரூ.100 மற்றும் அதற்கு குறைவான சினிமா டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இன்சுலின் உள்ளிட்ட 66 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி குறைகிறது.

நாடு முழுவதும் ஒரே விதமான மறைமுக வரியாக சரக்கு, சேவை வரிவிதிப்பு முறை அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி நடைமுறைக்கு வருகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே 1,200-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரி விதிப்பு அளவை ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்தது. ஆனால் அவற்றில் 133 பொருட்கள் மற்றும் சேவையின் வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

குறிப்பாக சினிமா டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி.யை 28 சதவீத அளவுக்கு நிர்ணயம் செய்ததற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர், “சினிமா என்பது கலை; சூதாட்டம் அல்ல. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் திரைப்படத்துறையின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். 28 சதவீத வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து முடிவு எடுப்பதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் விஞ்ஞான பவனில் நேற்று நடந்தது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் 66 பொருட்கள், சேவைகளின் வரிவிதிப்பை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக ரூ.100 மற்றும் அதற்கு குறைவான மதிப்பிலான சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜி.எஸ்.டி., 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணங்களை கொண்ட சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்ட பொருட்கள் விவரம் வருமாறு:-

* ஊறுகாய், கடுகு சாஸ், மொரப்பா (சாக்லெட்) ஆகியவை மீதான ஜி.எஸ்.டி., 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

* முந்திரி பருப்பு மீதான சரக்கு, சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆகிறது.

* குழந்தைகள் பயன்படுத்துகிற படம் வரைகிற டிராயிங் புத்தகங்கள் மீதான 12 சதவீத ஜி.எஸ்.டி., விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சி புத்தகங்களுக்கான வரியும் 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* கம்ப்யூட்டர் பிரிண்டர்கள் மீதான ஜி.எஸ்.டி., 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

* சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தியாக இன்சுலின் மீதான சரக்கு, சேவை வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* அகர்பத்தி மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. மட்டும் விதிக்கப்படும்.

* மாணவ, மாணவிகளின் பள்ளிக்கூட பைகள் மீதான ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

* பாக்கெட் உணவுப் பொருட்கள், சில வகை பழங்கள், காய்கறிகள், உடனடி உணவுகள் ஆகியவை மீதான ஜி.எஸ்.டி., 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதம் ஆகிறது.

* டிராக்டர் உதிரிபாகங்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com