கிரானைட் மோசடி: பி.ஆர். பழனிசாமி உள்பட 25 பேர் மீது கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

ரூ. 289.67 கோடி கிரானைட் மோசடி செய்ததாக பி.ஆர். பழனிச்சாமி உள்பட 25 பேர் மீது மேலூர் கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கிரானைட் மோசடி: பி.ஆர். பழனிசாமி உள்பட 25 பேர் மீது கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர், கீழவளவு, மேல வளவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது, அரசு புறம்போக்கு நிலங்களில் கிரானைட் கற்களை அடுக்கி வைத்தது போன்றவற்றின் மூலமாக மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பி.ஆர். கிரானைட் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி உள்பட பல்வேறு கிரானைட் அதிபர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் 3 வழக்குகளின் குற்றப்பத்திரிகையை மேலூர் நீதிமன்றத்தில் இன்று அரசு வழக்கறிஞர் ஷீலா, போலீஸ் துணை சூப்பிரண்டு குருசாமி, இன்ஸ்பெக்டர்கள் ராஜாசிங், பிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

கீழவளவு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வைக்கோல் புறம்போக்கு, கண்மாய், அரசு புறம்போக்கு நிலம் போன்றவற்றில் அனுமதி பெறாமல் குவாரி நடத்தி அரசுக்கு ரூ. 287.83 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2 ஆயிரத்து 769 பக்க குற்றப்பத்திரிகை ஒரு வழக்கில் தாக்கல் செய்யப்பட்டது.

இதே போல் கீழவளவு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெரிய எழுவன் கண்மாய் பகுதியில் அரசுக்கு ரூ. 1.24 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் கிரானைட் கற்கள் அடுக்கி வைத்ததாக பி.ஆர். பழனிச்சாமி, அவரது மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் 9 பேர் மீது 194 பக்க குற்றப்பத்திரிகையும், சின்ன எழுவன் கண்மாய் பகுதியில் அரசுக்கு ரூ. 60 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பி.ஆர். பழனிச்சாமி, அவரது மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் 9 பேர் மீது 190 பக்க குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தத்தில் இன்று 3 வழக்குகளின் அடிப்படையில் 3 ஆயிரத்து 153 பக்க குற்றப்பத்திரிகையில் ரூ. 289.67 கோடி கிரானைட் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பி.ஆர். பழனிச்சாமி உள்பட 25 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com