

சென்னை:
மதுரை கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதன்படி, அதிகாரி சகாயம் தலைமையில் அதிகாரிகள் குழு, கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி, அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.
அப்போது, சகாயம் குழு வக்கீல் எம்.ராதா கிருஷ்ணன் ஆஜராகி கூறியதாவது:-
‘சகாயம் விசாரணை குழுவில், மதுரையை சேர்ந்த தாசில்தார் மீனாட்சி சுந்தரம் இடம் பெற்று இருந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களாக அரசு சம்பளம் வழங்கவில்லை. கிரானைட் முறைகேடு குறித்து பொதுமக்கள் புகார் செய்ய, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தனி அலுவலகத்தை சகாயம் குழு அமைத்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு தேவையான செலவு தொகையை பல மாதங்களாக அரசு வழங்கவில்லை. எனவே, இதுகுறித்து வழக்கு தொடர உள்ளேன்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்’
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தாக்கல் செய்யுங்கள், விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்’ என்று கூறினர்.