மணவாளக்குறிச்சி அருகே கிரிக்கெட் மட்டையால் தாக்கி பாட்டியை கொன்ற பேரன்

மணவாளக்குறிச்சி அருகே கிரிக்கெட் மட்டையால் மூதாட்டியை, அவருடைய பேரன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை
கொலை
Published on

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே திருநயினார்குறிச்சி சரல் பகுதியை சேர்ந்தவர் தங்க நாடார். இவருடைய மனைவி செல்வம் (வயது 83). இவர்களுக்கு 3 மகனும், ஒரு மகளும் உள்ளனர். தங்க நாடார் இறந்து விட்டதால், செல்வம் தனது மகனான ரத்தினசாமி (63) வீட்டில் வசித்து வந்தார்.

ரத்தினசாமிக்கு புஷ்பராணி (53) என்ற மனைவியும், ரதீஷ் (27), ரஞ்சித் (24) என்ற 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். 2 மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லை. இதில், ரஞ்சித் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ரதீஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரதீஷ் பூரணமாக குணமடைய வேண்டி நேற்று முன்தினம் அவரது பெற்றோர் சாமித்தோப்புக்கு சென்றனர். பின்னர், அவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். இதனால் வீட்டில் ரதீசும், அவருடைய பாட்டியான செல்வமும் தனியாக இருந்தனர். அப்போது, திடீரென ரதீசுக்கும், பாட்டிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் அக்கம் பக்கத்தினருக்கும் கேட்டுள்ளது. பின்னர் எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை.

இதற்கிடையே நேற்று காலை வீட்டின் கதவு வெகுநேரமாக திறந்து கிடந்தது. ஆனால், செல்வம் வீட்டில் இருந்து வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் படிக்கட்டில் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் செல்வம் கதவை திறந்து வெளியே வந்த போது, ரதீஷ் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து வந்து அவரை அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரதீசை கைது செய்தனர்.

வாய் தகராறில் மூதாட்டியை கிரிக்கெட் மட்டையால் பேரன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com