

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்ற சர்ச்சை எழுந்து உள்ளது. மொத்தம் உள்ள 134 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 21 பேர் டி.டி.வி. தினகரனை ஆதரிப்பதால் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் 113 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பான்மைக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுவதால் எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக கவர்னர் வித்யாசாகர்ராவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அதில் எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் கவர்னர் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தனக்குள்ள பெரும் பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.
அதேசமயம், சபாநாயகரின் நடவடிக்கைக்கு தடை கோரி வெற்றிவேல் எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று அரசு தலைமை வக்கீலிடம் கேள்வி எழுப்பினார். இன்று பிற்பகலுக்குள் சட்ட பேரவை செயலாளரிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
பிற்பகல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறினார்.