பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்: டி.டி.வி.தினகரன்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடவேண்டும் என்று திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசிய போது எடுத்த படம்
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசிய போது எடுத்த படம்
Published on

திருச்சி:

திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர்சந்தை மைதானத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு அ.தி.மு.க. (அம்மா) தினகரன் ஆதரவு திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதில் தனது இறுதிமூச்சு உள்ளவரை ஜெயலலிதா உறுதியாக இருந்தார். அதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2013-ம் ஆண்டு வரை நிறுத்தி வைத்தார்.

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான துரோக அரசு, ஜெயலலிதாவின் பாதையில் இருந்து விலகி, தவறான வாக்குறுதி அளித்ததால் தான் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் இனியும் தமிழகத்தில் தொடரக்கூடாது என்பதற்காக தான் இந்த கூட்டம் இங்கு நடக்கிறது.

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை இல்லை. எனவே மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்க அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் இப்போது நடப்பது ஜெயலலிதா அரசு அல்ல.

பொதுச்செயலாளர் சசிகலா நினைத்திருந்தால், ஜெயலலிதா 70 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதே முதல்-அமைச்சராகி இருக்கலாம். அல்லது உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் அவர் சிறைக்கு செல்வதற்கு முன்பாக என்னை (தினகரன்) முதல்-அமைச்சராக ஆக்கி இருக்கலாம். எங்களுக்கு பதவி முக்கியம் அல்ல. அ.தி.மு.க. தான் உயிர் மூச்சு. எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த மாபெரும் இயக்கத்தை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் பாடுபட்டு வருகிறோம்.

ஆட்சி, அதிகாரம் அவர்களது கையில் இருக்கிறது என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருக்கிறார்கள். இந்த பிரச்சினையில் நீதிமன்றத்தில் நமக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுச்செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என பன்னீர்செல்வமும், பழனிசாமியும் இணைந்து முடிவு எடுத்ததால் தான், இந்த எம்.எல்.ஏ.க்கள் வெகுண்டெழுந்து முதல்-அமைச்சரை மாற்றவேண்டும் என கோரி கவர்னரை சந்தித்து மனு கொடுத்தார்கள்.

நானும், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று கவர்னரை சந்தித்து பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என கோரி மனு கொடுத்தேன். ஆனால் இன்று வரை கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நியாயம் கேட்ட நமது எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார். அவரும், அவரது அமைச்சர்களும் வீட்டுக்கு போகும் காலம் நெருங்கி விட்டது. தி.மு.க.வுடன் கைகோர்த்து ஆட்சியை கவிழ்க்க நாங்கள் திட்டமிடுவதாக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அ.தி.மு.க.வின் பிரதான எதிரி எப்போதுமே தி.மு.க. தான்.

இது தமிழக மக்களுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது நாங்கள் எப்படி தி.மு.க.வுடன் கைகோர்க்க முடியும்? இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என இந்த கூட்டத்தில் சபதமிடுகிறேன்.

தமிழக கவர்னர் சரியான முடிவு எடுத்து எடப்பாடி அரசு சட்டமன்றத்தில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்படி அவர் செய்தால் தான் மக்களுக்கு கவர்னர் பதவி மீது நம்பிக்கை வரும். இல்லை என்றால் அவர் பழனிசாமி அன்ட் கோ-வின் அவை தலைவர் என்று தான் மக்கள் நினைப்பார்கள்.

சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட இந்த இயக்கத்தில் சாதி மற்றும் கொங்கு மண்டலம் என்றெல்லாம் பேசி குழப்பத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். ஆனால் இந்த ஊழல் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். வெகுவிரைவில் தகுதி நீக்கத்தை நீதி மன்றம் தடை செய்யும். நமது எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமியை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்புவார்கள். மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொண்டர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com